பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஷாருக்கின் இந்த செயல்பாட்டிற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கருவில் உள்ள குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை, ஷாருக் எவ்வாறு அறிந்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கருவில் உள்ள குழந்தை, ஆணா, பெண்ணா என, ஷாருக் எப்படி கண்டறிந்தார். அவர், சட்ட விரோதமான முறையில், குழந்தையின் பாலினத்தை முன் கூட்டியே அறிந்தாரா? இதற்கு, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.
ஷாருக்கான் – கவுரி தம்பதிக்கு, ஏற்கனவே, ஆர்யன், 15, சுகானா, 13 என்ற, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன.
Post a Comment